பல ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஆளுங்கட்சி நிறுவனரான கண்ணபிரானுக்கு (வாகை சந்திரசேகர்) திடீரென நினைவு திரும்புகிறது. ஊழல்வாதியான (சத்யசீலன்) ராதாரவி முதல்வராக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். தனது விசுவாசியும் நேர்மையானவருமான ஞானோதயத்தின் (எம்.எஸ்.பாஸ்கர்) மகன் அமைச்சர் அருமை பிரகாசம் (கருணாகரன்) ஊழலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். சத்யசீலனுக்கு எதிராகக் கட்சி ஆரம்பிக்கிறார் கண்ணபிரான். ஆனால், ‘கேம் ஆப்’ மூலமாக மக்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை அள்ளலாம் என்கிறார், அருமை பிரகாசம். அதற்கான ஏற்பாடுகளை பண்ணும்போது, குருநாத்தும் (மிர்ச்சி சிவா) அவர் கும்பலும் அவரைக் கடத்துகிறது.
இதற்கிடையே குருநாத்தைப் பிடிக்க அலைகிறார் போலீஸ் அதிகாரி பிரம்மா (யோக் ஜேபி). இவர்களுக்குள் நடக்கும் களேபரங்கள்தான் கதை. நலன் குமரசாமி இயக்கத்தில் 11 வருடத்துக்கு முன் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தின் அடுத்த பாகம், இது. முதல் பாகம் ஹிட்டடிக்க, கொள்ளையடிக்கும் கொள்கை உள்ளிட்ட டார்க்காமெடியும் விஜய் சேதுபதி உள்ளிட்டோரின் நடிப்பும் புதிதாக இருந்தன. ஆனால் இதில் அப்படி ஏதும் இல்லாமல் முதல் பாக கதையையே கொஞ்சம் மாற்றி படமாக்கி இருக்கிறார், அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
அரசியல் நையாண்டியுடன் தொடங்கும் படத்தில், கற்பனை காதலி உட்பட முந்தைய படத்தின் சாயலிலேயே பல காட்சிகள் இருந்தாலும் ஆரம்பத்தில் சில இடங்களில் டார்க் காமெடி நன்றாகவே ஒர்க் ஆவுட் ஆகியிருக்கிறது. போதையில்லை என்றால் பாம்பு தெரிவது, பணம் வழங்குவதற்கு கேம்ஆப், வெள்ளை நிற சித்திரவதை அறை, கண்ணுக்குத் தெரியாத காதலிக்கு குண்டு பாய்ந்ததாக மருத்துவமனை செல்வது என சில ஐடியாக்கள் ரசிக்க வைக்கின்றன. ஆனால், அது படம் முழுவதும் தொடராமல் போனது திரைக்கதையின் பலவீனம். எட்வின் லூயிஸ் விஸ்வநாத்தின் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. பாடல்கள் ஈர்க்கவில்லை. கார்த்திக் கே.தில்லையின் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்க உதவுகிறது.
குருநாத் கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவா, தனது வழக்கமான நடிப்பையே வழங்கி, சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். எப்போதும் அவரை மது மற்றும் புகையுடன் காட்டியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். கற்பனை காதலி ஹரிஷாதன் பங்குக்கு கொஞ்சம் காமெடி பண்ணுகிறார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வரும் கருணாகரனுக்குக் கதையில் முக்கியத்துவம் இருப்பதால், ரசிக்க வைக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், வாகை சந்திரசேகர், ராதாரவி, சிவாவுடன் வரும் கல்கி ராஜா, 'நக்கலைட்ஸ்' கவி, போலீஸ் அதிகாரி யோக் ஜேபி ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். கதைக்கும் திரைக்கதைக்கும் இன்னும் சிரத்தை எடுத்திருந்தால், படம் ரசனையாக இருந்திருக்கும்.
Post a Comment