செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றிவரும் ஆர்.ஜே பாலாஜிக்கும், இஷா தல்வாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்நிலையில், ஒரு பிரச்னை காரணமாக பாலாஜியின் காரில் வந்து ஒளிந்துகொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தன்னைச் சிலர் துரத்துவதாகவும், தன் உயிருக்கே ஆபத்திருப்பதாகவும் கூறி அவர் பாலாஜியிடம் உதவி கேட்கிறார். முதலில் தயங்கும் பாலாஜி, பின்னர் ஐஸ்வர்யாவுக்கு உதவி செய்ய, அது அவருக்கே ஏகப்பட்ட சிக்கல்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. அதிலிருந்து எல்லாம் பாலாஜி மீண்டாரா, ஐஸ்வர்யா ராஜேஷுக்குப் பின்னாலிருக்கும் மர்மம் என்ன என்பதைப் பரபரப்பான ஒரு டெம்ப்ளட் த்ரில்லர் திரைக்கதையில் சொல்ல முயன்றிருக்கிறார் மலையாள இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
முதல் காட்சியிலிருந்தே திரைக்கதை நேராகப் படத்துக்குள் சென்றுவிடுகிறது. முதற்பாதி முழுக்கவே படம் பாலாஜியின் பார்வையிலேயே பயணிக்கிறது. இக்கட்டான சூழ்நிலைகளில் செய்வதறியாது குழம்புவது, பயப்படுவது, அதிர்ச்சியடைவது, தற்கொலைக்கு முயல்வது என, தன் முந்தைய படங்களோடு ஒப்பிடுகையில் பாலாஜி ஒரு நடிகராகத் தேர்ந்திருக்கிறார். ஆனால், சில முக்கிய தருணங்களில், ஒருவித வெறுமை நிறைந்த பார்வை மட்டுமே அவரிடமிருந்து பதிலாக வருகிறது.
முதற்பாதியில், ஒரு ட்ராவல் பேக்கில் 'ரகசியத்தை' வைத்துக்கொண்டு, பாலாஜி ஒவ்வொரு இடமாகப் பதற்றத்துடன் அலைவதும், ஆங்காங்கே அவருடன் இணையும் சிறிய கதாபாத்திரங்களும் ரசிக்கும்படியாக எழுதப்பட்டிருக்கின்றன. இரண்டாம் பாதி, ஒரு த்ரில்லர் நாவலுக்கான டெம்ப்ளேட்டுக்குள் அப்படியே பொருந்திப் போகிறது. ஆனால், அதுவும் ஏற்கெனவே வாசித்து முடித்த நாவலின் உணர்வைத் தருவதுதான் சிக்கல்.
கதையின் நாயகன் ஒவ்வொருவரையும் சென்று விசாரிப்பது, தன் குற்றவுணர்ச்சியால் ஹீரோ அவதாரம் எடுப்பது எனப் பழக்கப்பட்ட காட்சிகளே நிறைந்திருக்கின்றன. திரைக்கதை பரபர என நகர்ந்தாலும், கூடவே ஆயிரம் கேள்விகளும் பின்தொடர்கின்றன. அதிலும் பிரச்னையிலிருந்து தப்பிக்க பாலாஜி எடுக்கும் முடிவுகள் படு செயற்கைத்தனம்.
தன்னை ஒரு சாமானியன் என அடிக்கடி கூறிக்கொள்ளும் பாலாஜி, இரண்டாம் பாதியில் மட்டும் எப்படி புலனாய்வு புலியாகிறார், காவல்துறை ஏன் இவ்வளவு சுமாரான ஐடியாக்களை மட்டுமே யோசிக்கிறது, ஒரு காவலரை ஒரே நாளில் பணி மாற்றம் செய்யும் அளவுக்குப் பலம் பொருந்திய வில்லன் க்ரூப், ஏன் சாதாரண பாலாஜியோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறது எனப் படம் முழுவதுமே கேள்விகள் எழுந்தவாறு உள்ளன.
மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் பெரியளவிலான ஒரு குற்றப்பின்னணியை இறுதிக்காட்சியில் முன்வைக்கிறது படம். ஆனால், அக்காட்சிகளுக்கு இருக்க வேண்டிய ஆழமும் நம்பகத்தன்மையும் இல்லாமல், கதாநாயகனின் சாகசத்தைப் பிரதிபலிக்கும் விஷயங்களாக மட்டுமே அவைக் கடந்துபோகின்றன. அதேபோல, யார் குற்றவாளி என்ற ட்விஸ்ட் தெரியவந்ததும் அதுவரை இருந்த லாஜிக் ஓட்டைகள் அப்படியே இரு மடங்காகின்றன.
Post a Comment