நான்கு வெவ்வேறு மனிதர்களின், வெவ்வேறு வாழ்க்கைச் சூழல்களில் நிகழும் நான்கு வருடச் சம்பவங்களின் அப்பட்டமான தொகுப்பு 'சோலோ'. ஒருவொருக்கொருவர் தொடர்பில்லாத அந்த நால்வரின் வாழ்வில் நிகழும் காதல், கோபம், சண்டை, காத்திருப்பு, பழிவாங்கல் ஆகியவற்றைப் பற்றிய கதைதான் சோலோ. ஆந்தாலஜி எனும் தொகுப்பு வகையாக நான்கு கதைகளைத் தொகுத்து எடுக்கப்பட்டிருக்கிறது இந்தத் திரைப்படம். கடைசியில் எல்லாத் திரைக்கதைகளையும் ஒரு புள்ளியில் முடிச்சு போட்டு அவிழ்க்கிற வேலைகள் எல்லாம் இல்லாமல் வெறுமனே ஒரு தொகுப்பாக ஓரளவுக்குச் சுவாரஸ்யம் குறையாமல் கொடுத்திருக்கிறார்கள்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
சிவனின் நான்கு பாகங்களாக, நான்கு கேரக்டர்களில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். தாடியை ஷேவ் செய்து ஒன்று, ட்ரிம் செய்து ஒன்று, கண்ணாடி அணிந்து ஒன்று, நீளமான முடி வைத்து ஒன்று என துல்கருக்கு வித்தியாசம் காட்ட படத்தில் நான்கு கெட்டப். ஆனாலும், அந்த சாக்லேட் பாய் லுக்கை விட்டு அவரை வெளியேற்றிப் பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. நான்கு கதைகளையும் ஒற்றை மனிதராகத் தோளில் தூக்கிக்கொண்டே அலையும் துல்கர், கண்பார்வையற்ற தன்ஷிகா, விபத்தில் அடிபட்டுச் சாகும் ஆர்த்தி வெங்கடேஷ், பெரும்பாலும் இருட்டுக்குள்ளேயே காட்டப்படும் ஸ்ருதி ஹரிஹரன், ரொமான்ஸ் காட்சிகளில் லைக்ஸ் அள்ளும் நேஹா ஷர்மா எல்லோருடைய அழகிலும் நடிப்பிலும் அத்தனை நேர்த்தி.
கொஞ்சமெல்லாம் இல்லை ரொம்பவே சிக்கலான திரைக்கதை வடிவம்... நான்கு பகுதிகளுக்குமான கதை, காட்சிகள், கலர் டோன், லொக்கேஷன், எனப் பார்த்துப் பார்த்து வித்தியாசம் காட்டியிருக்கிறார் இயக்குநர். பார்க்கும்போதே குழப்புகிற மாதிரியான சிக்கலான கதை. சினிமாவில் இதை ஒரு சோதனை முயற்சியாகப் பார்க்கலாம்.
முதல் பகுதியான நீர் கதையில் கல்லூரி மாணவன் ஷேகராக வரும் துல்கர் பார்வையற்ற தன்ஷிகாவை காதலிக்கிறார். குடும்பத்தினரின் எதிர்ப்புகளைச் சமாளித்துத் திருமணம் செய்து கொள்கிறவர்களுக்கு ஏற்படுக்கிற விளைவுதான் கதை. திக்கிப் பேசும் திறனுள்ள துல்கர் தன்ஷிகாவிடம் காதல் சொல்லும் காட்சிகளில் ரொமான்டிக்காகவே பேசியிருக்கிறார்.
வலி, கோபம், பிரிவு, அழுகை என எல்லா உணர்ச்சிகளையும் காட்டுவதில் போட்டி போட்டிருக்கிறார்கள் துல்கரும் தன்ஷிகாவும். இரண்டாவது பகுதியான காற்று கதையில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றும் த்ரிலோக் (துல்கர்), தனது மனைவி ஆர்த்தி வெங்கடேஷை விபத்தில் பலிகொடுக்கிறார். தனது மனைவி உயிரிழக்கக் காரணமானவர்களை எப்படிப் பழிவாங்குகிறார் என்பதே கதை. சிறு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காத கேரக்டராக வரும் த்ரிலோக் இரண்டு கொலைகளை எப்படிச் செய்கிறார் என்பதை த்ரிலோக்கின் பகையுணர்ச்சி ட்ரான்ஸ்ஃபர்மேஷன் காட்சியில் சிறப்பாகக் காட்டியிருக்கிறார்கள்.
அதற்கேற்றாற்போல், ராவான கொலையாக இல்லாமல் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது பகுதியான நெருப்பு கதையில் டான் ஷிவாவாக வருகிறார் துல்கர். இவரது மனைவி ருக்குவாக ஸ்ருதி ஹரிஹரன் நடித்திருக்கிறார். ஷிவா எப்படி இந்த க்ரிமினல் உலகத்துக்குள் வருகிறார்... அவனது தந்தை, தாய்க்குமான பிரச்னை எதில் முடிகிறது என்பதை விளக்குகிற கதை இது. அதிகம் பேசாமல், தனிமை விரும்புபவனின் இறுக்கமான மனநிலையைச் சிறப்பாகப் பிரதிபலித்திருக்கிறார் துல்கர் சல்மான். ஒன்றிரண்டு வசனங்கள் மட்டும் இந்தப் பகுதியில் துல்கருக்கு. மற்றபடி, பார்வையிலேயே கேள்வி கேட்பது, சம்மதம் சொல்வது என எல்லாமும் செய்திருக்கிறார் துல்கர்.
நான்காவது பகுதியான நிலம் கதையில் ராணுவ வீரன் ருத்ராவாக துல்கரும், ராணுவ உயரதிகாரியின் மகள் அக்ஷராவாக நேஹா ஷர்மாவும் வருகிறார்கள். அவர்களுக்கிடையேயான ஜாலியான காதலும், அதன் முடிவு எப்படி இருக்கிறது என்பதையும் சுவாரஸ்யமாகச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். துல்கர் - நேஹா ஷர்மாவுக்கு இடையேயான மிகச்சில காதல் காட்சிகளிலும் ரொமான்ஸ் அவ்வளவு நிறைவாக எடுக்கப்பட்டிருக்கிறது. குறும்புச் சிரிப்புடன் வளையவரும் நேஹா ஷர்மா ரசிகர்கள் மனம் கவர்வார்.
ட்விஸ்ட்டாக வைக்கக் காரணம் கிடைக்கவில்லையோ என்னவோ, 'நாட்டாமை' படத்து கவுண்டமணி செந்திலின் 'டேய் தகப்பா... உனக்கே இது நல்லாருக்கா...' வசனம் நினைவுக்கு வரும்படி க்ளைமாக்ஸ் அமைத்திருக்கிறார்கள். 'சோலோ' எனப் படத்திற்கு டைட்டில் வைத்திருப்பதன் காரணம், நான்கு கதைகளின் இறுதியிலும் தோற்றுப்போய் தனிமைப்பட்டு சோலோவாகவே நிற்கிறார் துல்கர் என்பதால் இருக்கலாம். காதலில் தோல்வி, இல்லையெனில் திருமணத்திற்குப் பின்னான வாழ்க்கையில் தோல்வி. இதுதான் நான்கு கதைகளுக்குமிடையே இருக்கும் ஒற்றுமை. நான்கு கேரக்டர்களிலும் துல்கர் சல்மான், காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.
துல்கர் சல்மானுக்கு தமிழிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதாலேயே நேரடித் தமிழ்ப்படமாக வெளியிடப்பட்டது 'சோலோ'. அதற்காக, சதீஷ், நாசர், சுஹாசினி, அழகம் பெருமாள், ஜான் விஜய் எனத் தெரிந்த முகங்களையும் நடிக்க வைத்திருக்கிறார்கள். ஆனாலும், திரைக்கதைக்கும், இசைக்கும் இடையே மாட்டிக்கொண்டு முழிக்கும் வசனங்களால் டப்பிங் பட ஃபீல் வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. துல்கர் சல்மானைத் தவிர மற்ற அனைவரும் வெகுசில நிமிடங்கள் மட்டுமே படத்தில் வருவதால் மனதில் ஒட்ட மறுக்கிறார்கள்.
நான்கு பகுதிகளையும் வித்தியாசப் படுத்தும் கலர் டோன், களத்திற்காக சினிமாட்டோகிராஃபியையும், சிக்கலான படத்தைக் கோர்வையாகத் தொகுத்திருக்கிற எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத்தையும் பாராட்டலாம். ஆனாலும், நான்கு பகுதிகளும் ஒன்றுக்கொன்று தொடர்பற்று விரிவதால் எந்த இடத்திலும் கனெக்ட் ஆகிக்கொள்ள முடிவதில்லை. ஒரு பகுதி முடியப்போகிற கணத்தில்தான் துல்கரை பின்தொடர ஆரம்பித்திருப்போம். அதற்குள் அடுத்த கதை வந்துவிடும்.
இப்படி எந்த ஒட்டலும் இல்லாமல் கதை மிதந்து கொண்டேயிருப்பது பலவீனம். காட்சிகளையும், உணர்வுகளையும் பார்வையாளர்களுக்கு முழுமையாகக் கடத்தத் தவறுகிறது படம். சறுக்கல்கள் இருந்தாலும் சோலோ திரைத்துறையில் ஒரு சோதனை முயற்சி. சினிமாவில் புதிய சிந்தனைகளையும், முயற்சிகளையும் விரும்புகிற ரசிகர்கள் கட்டாயம் பார்க்கலாம்.
Post a Comment