தமிழ் சினிமாவில் யாராலும் கண்டுகொள்ளப்படாத சென்னையின் புறநகர் கிராமங்கள்தான் கதைக்களம். காதல் திருமணம் செய்வதையே வாழ்வின் ஆகப்பெரும் லட்சியமாகக்கொண்டு, அதற்காக சங்கம் வைத்து `காதல்’ வளர்த்து வாழ்ந்துகொண்டிருக்கின்றார் தீனா. அவர் வாழ்க்கையின் காதல் எபிசோடுகளும், அவற்றில் அவர் வாங்கும் `பல்பு’களும்தான் கதை(!). ஆனால், எந்த இடத்திலும் சுவாரஸ்யம் குறையாமல் திரைக்கதையை எழுதியிருக்கிறார் பா.இரஞ்சித்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
`அட்டகத்தி’ தினேஷ், இன்றும் இவர் அப்படித்தான் அழைக்கப்படுகிறார். ‘என் ஜட்டி எங்கம்மா?’ என முதல் காட்சியில் அம்மாவிடம் கோபித்துக்கொள்வது, பேருந்தில் ஃபுட்போர்டு அடித்துக்கொண்டே காதலியை ‘சைட்’ அடிப்பது, `ரூட் தல'யாக மாறிய பிறகு கெத்துகாட்டுவது, எதிர் கேங்கிடம் அடிவாங்கிய பிறகு அழுதுகொண்டே போட்டுத்தருவது என அனைத்துக் காட்சிகளிலும் ரகளையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
`அட்டகத்தி’யில் எந்தவோர் இடத்திலும் அரசியல் பேசப்பட்டிருக்காது. மிகச்சாதாரண கதை. புதுமுக நடிகர், நடிகையர் நடித்து, புதுமுக இயக்குநர் இயக்கியது. அப்படியிருந்தும் `அட்டகத்தி’ எப்படி ஸ்பெஷலானது?
நூற்றாண்டு தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாத அட்டவணைப்பிரிவினரின் வாழ்வியலின் கொண்டாட்டங்களைப் பதிவு செய்தது ‘அட்டகத்தி’. சாவு வீட்டில் கானா பாடி ஆடுவது, குடும்பத்தோடு அமர்ந்து நிலா வெளிச்சத்தில் கானா பாடி மகிழ்வது, மிகச் சாதாரண உரையாடலில் மாட்டுக்கறியைப் பற்றி பேசுவது போன்ற இடங்கள் தமிழ் சினிமாவிற்குப் புதியவை. யாரும் பார்த்திடாத முகங்களையும், வாழ்க்கையையும் ‘அட்டகத்தி’ மூலம் சாதாரணமாக பதிவு செய்திருந்தார் பா.இரஞ்சித். அதைவிட முக்கியமாக, பாபாசாகேப் அம்பேத்கர் படங்கள் அதிகளவில் இடம்பெற்றது 'அட்டகத்தி'யில்தான். இதுவும்கூட ஒருவகையான அரசியல் செயல்பாடு என்று சொல்லலாம்.
’அட்டகத்தி’ பேசிய மற்றொரு பொருள் – காதல். அந்த காலத்து ‘வசந்த மாளிகை’ முதல் இந்த காலத்து ’காற்று வெளியிடை’ வரை காதல் புனிதமானதாகவே அணுகப்பட்டு வருகிறது. ‘அட்டகத்தி’ அதனை உடைத்து காதலை எதார்த்தமாக அணுகியது ’அட்டகத்தி’யில் ஹீரோ காதல் தோல்வியினை வெளிப்படுத்தி அழுகையை வரவழைக்க ‘ஒருதலை ராகம்’ திரைப்படத்திற்கு செல்கிறான்; ‘'திவ்யாவா, நதியாவா?’ எனக் குழம்பியபடியே இரண்டு பெண்களில் யாரிடம் காதலை சொல்வது எனக் குழம்புகிறான்; காதலித்து தோல்வியடைந்து மீண்டும் மீண்டும் காதலிக்கிறான். அதிலும் தினேஷ் போண்டா சாப்பிடும் காட்சி, உலகத்தரம்.
’ஆம்பளனா கெத்தா இருக்கணும்’,’ஆம்பளப்புள்ள அழக்கூடாது’ என்பவை நாம் வாழும் சமூகத்தின் சாபங்கள். இவை ஆணுக்குரிய தன்மைகளாக இந்த சமூகத்தால் திணிக்கப்பட்டவை. ‘அட்டகத்தி’ பி.ஏ ஹிஸ்டரி படிக்க விரும்புகிறான். ஏன் என்று கேட்டால் ‘அதுதான் கெத்து!’ என்கிறான். ரூட்டு தலயாகி தன்னை கெத்தாக காட்டிக்கொண்டாலும், மனதளவிலும், உடலளவிலும் காயப்பட்டால் அழுகிறான். ஹீரோயிசம் என்னும் கருத்தியலை மிக நேர்த்தியாக ‘அட்டகத்தி’ மூலம் உடைத்திருந்தார் பா. இரஞ்சித்.
‘அட்டகத்தி’யின் மற்றொரு பெரிய பலம் – அதன் இசை. சந்தோஷ் நாராயணன் இசையில் ‘ஆடி போனா ஆவணி’, ‘நடுக்கடலுல கப்பல’, ‘ஆசை ஓர் புல்வெளி’ ஆகிய பாடல்கள் என்றும் இனியவையாக நிற்கின்றன. படம் முழுக்க கிடார் இசை பரவிக்கிடக்கிறது. ‘அட்டகத்தி’யின் ரூட்டு தலயின் கிடார் இசை நீண்டு ‘கபாலி’யின் ‘நெருப்புடா!’விலும் ஒலித்தது. கானா பாலா ‘அட்டகத்தி’ மூலம் உருவான முக்கியமான பாடகர். கானா பாலாவின் பாடல்கள் சென்னையின் அடையாளக்குரலாக வெகுமக்களிடம் ஒலிக்கத் தொடங்கிய இடம் ‘அட்டகத்தி’.
’அட்டகத்தி’ தமிழ் சினிமாவின் பல்வேறு கற்பிதங்களை அடித்து நொறுக்கியது. அதனாலேயே அது இன்றும் இளைஞர்களால் கொண்டாடப்படுகிறது. கல்ட் (Cult) திரைப்படமாக நிற்கிறது.
Post a Comment