பணம் என்பது மனித வாழ்க்கையின் மதிப்பீடுகளைச் சிதைத்து, எப்படி குலைத்துப்போடுகிறது என்பதையும் பணத்தைத் தாண்டியும் உறவுகளை நேசிக்கும் மனித மனங்களையும் குற்றப் பின்னணி திரைக்கதை வழியாகச் சொல்கிறது 'குரங்கு பொம்மை'!
DOWNLOAD
சென்னையில் கால்டாக்ஸி ஓட்டும் விதார்த்தின் அப்பா பாரதிராஜா, தஞ்சையில் சட்டவிரோதத் தொழில் செய்யும் தேனப்பனிடம் வேலை பார்க்கிறார். விதார்த்துக்குப் பெண் பார்க்கும் படலம், சிலபல காரணங்களால் கைகலப்பில் முடிகிறது. விதார்த் ஒரு பஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது பெரியவர் ஒருவரிடமிருந்து குரங்குப் படம் போட்ட பையை பிக்பாக்கெட் திருடன் ஒருவர் பறித்துச் செல்கிறார். அந்தப் பையில் என்ன இருக்கிறது, வெவ்வேறு பகுதிகளில் அதன் பயணம் ஆகியவற்றை மையமாக வைத்து விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் நித்திலன்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
'குற்றமே தண்டனை', 'கிடாயின் கருணை மனு' வரிசையில் விதார்த்துக்குப் பெயர் சொல்லும் படம் 'குரங்கு பொம்மை'. 'நடிப்பில் நான் யார் தெரியுமா' எனக் காட்டமுடியாதபடியான கதாபாத்திரம். எந்த உணர்வுகளையும் பளீரென காட்டாமல், இயல்பாகவே இருக்க வேண்டும் என்பதுதான் இந்த கேரக்டரின் அடிப்படை. அதைக் கச்சிதமாக செய்திருக்கிறார் விதார்த். பெண் பார்க்கப்போய் சண்டையில் முடிந்தாலும், அந்தக் காதலை சென்னையில் தொடர்வது சுவாரஸ்ய அத்தியாயம். தந்தையைக் காணாமல் தவிப்பும் தேடலுமான விதார்த்தின் பயணத்தில் வேகமும் விறுவிறுப்பும்.
படத்தின் இன்னொரு நாயகன் என்று தாராளமாகப் பாரதிராஜாவைச் சொல்லலாம். இத்தனைக்கும் மிகக் குறைவான காட்சிகள், மிகக் குறைந்த வசனங்கள்தான். ஆனால், நட்பின் விலக முடியாத நெருக்கத்தையும் முதுமையின் தளர்வையும் அழகாகத் தன் உடல்மொழியில் கொண்டுவந்திருக்கிறார். குறிப்பாக தழுதழுத்தபடி தன் கதை சொல்லும் அந்த ஒற்றைக்காட்சியின்போது.... பின்னிட்டீங்க எங்கள் இனிய தமிழ் இயக்குநரே!
வில்லன் என்றாலே பிரமாண்டமாகவும் மிரட்டலாகவும் பார்த்துப் பழகிய நமக்கு, மிக மிகச் சாதாரணப் பின்னணியைக் கொண்ட வில்லனாக குமரவேலு அசத்தியிருக்கிறார். "அண்ணே... என்னண்ணே" என்று இன்முகம் காட்டியே வன்முறைகாட்டும் இடங்களில்... ரணகளம். மரக்கடை ஏகாம்பரமாக வரும் தேனப்பனின் நடிப்பிலும் கதாபாத்திர வடிவமைப்பிலும் நேர்த்தி.
சிந்தனை என்ற கல்கி கதாபாத்திரத்தைப் போல பல கதாபாத்திரங்களை நாம் சமீபமாகவே நிறைய பார்க்கிறோம் என்பதால் புதிதாக ஒன்றுமில்லை. ஆனால் பாத்திரத்துக்கு ஏற்றபடி சின்னச் சின்ன குறும்புகளும் உடல்மொழிகளுமாய், கவனிக்கத்தக்க வரவுதான் கல்கி. சற்றே பெரிய கண்களோடு இயல்பான நாயகியாய் டெல்னா டேவிஸ். சில காட்சிகளே வந்தாலும் பாலாசிங்கும் கிருஷ்ணமூர்த்தியும் ரசிக்கவைக்கிறார்கள். கஞ்சா கருப்புவின் அந்த கடிகார ஐடியா செம செம! இப்படி படத்தில் ரசிப்பதற்கு சின்னச் சின்னதாய் சுவாரஸ்யமான ஐடியாக்கள்.
ஒரே கதையை இருவேறு முனைகளில் இருந்து பின்னிக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் முடிச்சுப் போடுவதும், இறுதியில் அதை அவிழ்ப்பதுமாக நல்ல உத்தியைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர்.
"பக்கத்துல நல்ல போலீஸ் ஸ்டேஷன் எதுவும் இருக்கா?",
"ஹெல்மெட் இல்லையா?" "ஆங்... பைக் மட்டும்தான் இருந்தது",
"என்ன அண்ணே இருமுறீங்க, உடம்பு எதுவும் சரியில்லையா என்ன?"
"காலைல சிகரெட் பிடிச்சேன். இரும மறந்துட்டேன்" என்று மடோனே அஸ்வினின் வசனங்கள் ரசிக்கவைக்கின்றன.
'உலிடவாரு கண்டந்தே', 'ரஞ்சிதரங்கா', 'க்ரிக் பார்ட்டி' ஆகிய கன்னடப் படங்களில் மிரட்டி எடுத்த இசையமைப்பாளர் அஜனீஷுக்கு இது தமிழில் முதல் படம். பாடல்களை விட, படத்தின் ஓட்டத்துக்கு ஏற்ப வழங்கியிருக்கும் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. நான் லீனியர் கதை சொல்லலில் எந்தக் குழப்பமும் ஏற்படாமல் படத்தைத் தொகுத்திருக்கிறார் அபிநவ் சுந்தர் நாயக். சென்னையின் இயல்பையும் இடுக்குகளையும் உள்ளது உள்ளபடி கவர்ந்திருக்கிறது உதயகுமாரின் ஒளிப்பதிவு.
அவ்வளவு விவரமில்லாத பாரதிராஜாவை நம்பி அந்தப் பையைத் தேனப்பன் கொடுத்துவிடுவாரா, விதார்த் தன் ஃபேஸ்புக்கில் போடும் செய்தி இவ்வளவு பரவலாகச் சென்றுசேருமா, பிக்பாக்கெட் கல்கிக்கு ஜோசியம் சொல்லும் பரிகாரத்தில் எந்த எதார்த்தமும் இல்லையே, ‘என் வீட்டுக்காரர் கார்ப்பரேஷன்ல வேலை செய்றார். குப்பை தொட்டியில கண்டெடுத்தார். இதுல உங்க போட்டோவை பார்த்தேன்’ என்று பாரதிராஜாவின் செல்போனை விதார்த்திடம் ஒரு பெண் போகிற போக்கில் கொடுப்பது செயற்கையாக இருக்கிறதே, காவல் நிலையத்தில் நாயகியை விதார்த் சொல்லி வைத்தது போல சந்திப்பாரா... இப்படி லாஜிக்கலாகக் கேட்கப் பல கேள்விகள் இருக்கின்றன. குறிப்பாக க்ளைமாக்ஸில் குமாரவேலுவுக்கு ஏற்பட்ட நிலையைச் சொல்ல ஒரு பெண்ணை இழிவுபடுத்தியிருப்பது எந்தவிதத்திலும் ஏற்கத்தக்கதில்லை.
ஆனால், 'மோசமானவாகவே இருந்தாலும் நண்பன் என்பதற்காக விலகாமல் இருந்தால் கர்ணனுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும்' என்பதை பாரதிராஜா பாத்திரம் மூலமும் 'பணம் ஒரு மனிதனை எவ்வளவு மோசமானவனாக மாற்றிவிடுகிறது' என்பதைக் குமரவேலு பாத்திரம் மூலமும், மோசமானவராகவே இருந்தாலும் நட்பின் ஆழத்தைப் புரிந்தவராக தேனப்பன் பாத்திரத்தைக் காட்டியதன் மூலமும் 'குரங்கு பொம்மை'யைப் பாராட்டி வரவேற்கலாம்!
Post a Comment