ஒரு நல்லாசிரியரின் கதை. ஒரு முரட்டுத்தனமான, சண்டிமாடு போல எதற்கும் அடங்காத ஒரு மாணவனைச் சிரமப்பட்டுத் திருத்த முயலும் ஒரு வாத்தியாரின் கதை. இதற்காக அவர் ரத்தம் சிந்தவும் வேண்டியிருக்கிறது. இது போன்ற கருப்பொருளைக் கொண்ட திரைப்படங்கள் ஹாலிவுட்டில் நிறைய வந்திருக்கின்றன. To Sir, with Love (1967) போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். 'நம்மவர்' திரைப்படம், பிரியதர்ஷன் இயக்கி, 1987-ல் வெளிவந்த 'செப்பு' என்கிற மலையாளத் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படமுமே 'Class of 1984' என்கிற ஆங்கிலப்படத்தின் தழுவல்தான்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
தழுவல் கதைதான் என்றாலும் அதை ஈயடிச்சான் காப்பியாகச் செய்யாமல், தமிழிற்கு ஏற்றபடி திறமையாக மாற்றுவதில் கமல் எப்போதுமே நிறைய மெனக்கெடுவார். மிகுந்த அனுபவம் உள்ள கதையாசிரியர்களை, இயக்குநர்களை அருகில் வைத்துக் கொள்வார். அந்த வகையில் இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் சேது மாதவன். மலையாள சினிமாவில் பெரிய கை. முன்னோடி இயக்குநர். தேசிய அளவிலும், மாநில அளவிலும் நிறைய விருதுகள் வாங்கியவர்.
DOWNLOAD
கல்லூரி மாணவர்களின் ரவுடித்தனம், போதைப் பழக்கம், சாராய சக்ரவர்த்திகள் பினாமி பணத்தில் கல்லூரி கட்டி கல்வித் தந்தைகளாக மாறும் சமூக அவலம், பாலியல் கல்வியின் அவசியம் உள்ளிட்ட பல விஷயங்களை இந்தப் படம் பேசியது ‘அப்பவே கமல் இதை செஞ்சுட்டாரே’ என்று வியக்கும் சமாச்சாரங்களில் இணைந்தது. ஒரு நல்லாசிரியனுக்கு உதாரணமாக வி.சி.செல்வம் என்கிற கல்லூரி துணை முதல்வர் பாத்திரத்தில் கமல் சிறப்பாக நடித்திருந்தார்.
சக்திவேல் கலைக்கல்லூரி ரவுடித்தனத்திற்கு பெயர் போனதாக இருக்கிறது. படிக்கிற மாணவர்கள் ஒருபக்கம் நிறைய இருந்தாலும், கல்லூரி உரிமையாளரின் மகனான ரமேஷால் கல்லூரிக்குக் கெட்ட பெயர். தனக்கென ஒரு குழுவை அமைத்துக் கொண்டு கல்லூரி வளாகத்தில் போதை மருந்தை உட்கொள்ளுவது உள்ளிட்ட பல கலாட்டாக்களைச் செய்கிறான். ரவுடிகளின் பக்கபலத்துடன் செயல்படும் முரட்டுத்தனமான ரமேஷிற்கு அனைவரும் பயப்படுகிறார்கள்.
இந்த நிலையில் மதுரையிலிருந்து வி.சி. செல்வம் என்கிற பேராசிரியர், கல்லூரியின் துணை முதல்வராகப் பொறுப்பேற்கிறார். அங்குப் பல சீர்திருத்தங்களைச் செய்ய முயல்கிறார். ரமேஷின் ரவுடித்தனத்தை கட்டுப்படுத்தி அவனை நல்வழிக்கு இட்டுச் செல்ல முனைகிறார். இந்தப் பயணத்தில் உயிர் போகும் ஆபத்து உள்ளிட்ட பல இடையூறுகளை அவர் எதிர்கொள்ள நேர்கிறது.
வி.சி.செல்வமாக கமல். ஒரு படத்தின் கெட்டப்பைக் கொண்டே அது கமலின் எந்தப் படம் என்பதை எளிதாக யூகித்து விடலாம். அந்தளவிற்கு ஒவ்வொரு பாத்திரத்திற்கும் வித்தியாசமான தோற்றத்தை அளிக்க கமல் மெனக்கெடுவார். அது செயற்கையாகவோ, வலிந்து திணித்ததாகவோ அல்லாமல் பாத்திரத்தின் தன்மைக்குப் பொருத்தமாக அமையும். அந்த வகையில் ‘நம்மவர்’ திரைப்படத்தில் கமலின் தோற்றம் ஐரோப்பியப் பாணியில் இருக்கும். ஸ்டைலான தாடி, பொருத்தமான மூக்குக் கண்ணாடி, நவீன ஆடைகள் என்று பார்ப்பதற்கு அசத்தலாக இருப்பார்.
‘நம்மவர்’ திரைப்படம் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டதுதான் என்றாலும் அனைத்துமே மிதமான தன்மையுடன் இருக்கும். ஒரு கல்லூரி பேராசிரியர், கராத்தே மாரி போன்றவர்களுடன் எப்படி ‘பிளேடு பக்கிரி’ சண்டையெல்லாம் போட முடியும் என்பதற்கும் லாஜிக் வைத்திருந்தார்கள். செல்வம் இப்போது பேராசிரியராக இருந்தாலும் மாணவராக இருந்த போது நிறைய அராஜகம் செய்தவர் என்பதால் குத்து வரிசையெல்லாம் பழக்கமுண்டு. எனவே சண்டைக்காட்சிகள் நம்பகத்தன்மையுடன் அமைந்திருந்தன. “இதெல்லாம் வேணாம்ன்ட்டுதானே படிச்சு காலேஜ் வேலைக்கு வந்திருக்கிறேன்” என்று மாரியிடம் தடாலென்று மெட்ராஸ் பாஷையில் கமல் பேசுவது ரசிக்கத்தக்கக் காட்சி.
கமல் கல்லூரியில் பாடம் நடத்தும் காட்சிகள் அனைத்துமே ரகளையாக இருக்கும். ஒரு சம்பிரதாயமான கல்விமுறையை அளிக்க அவருக்கு விருப்பமிருக்காது. மாணவர்கள் பாலின ரீதியாகப் பிரிந்து அமர்ந்திருப்பதில் அவருக்கு உடன்பாடில்லை என்பதால் அகர வரிசையில் கலந்து அமர வைப்பார். "சார்... சார்... எனக்கு அர்ஜெண்ட்டா பக்தி வந்துச்சு... இங்க எங்கயாவது கோயில் இருக்கா’ன்னு யாராவது ரோட்ல கேட்டு பார்த்திருக்கீங்களா?" என்கிற வசனத்தின் மூலம் கோயிலை விடவும் கழிப்பறைதான் அவசியம் என்கிற ரகளையான கிண்டல் இருக்கும். கல்லூரி வளாகத்தின் சுத்தம் பற்றி மாணவர்களுக்கு உணர்த்தி விட்டு அவர்களை வைத்தே கல்லூரியை சுத்தம் செய்வது நல்ல உத்தி.
கமலுக்கும் கௌதமிக்குமான ரொமான்ஸ் எபிஸோட், தமிழ் சினிமாவின் வழக்கமான பாணியிலிருந்து விலகி ரசனையாக உருவாக்கப்பட்டிருக்கும். நடிப்பாக இருந்தாலும் அதையும் தாண்டிய அசலான அந்நியோன்யம் இவர்களின் உறவில் தெரியும். இது போன்ற விஷயங்களில் கமல் சமர்த்தர்.
கல்லூரியில் கமல் கொண்டு வரும் மாற்றங்களை முதலில் வெறுக்கும் கௌதமி, பிறகு அவரைப் புரிந்து கொண்டு ஆதரவு தருவார். பிறகு அது காதலாகப் பரிணமிக்கும். கமலின் ‘தனிப்பட்ட’ பிரச்னையைப் பற்றி அறிந்ததும் அந்தக் காதல் இன்னமும் கூடுதலாகும். ஆனால் கமலோ தன் மீது யாராவது அனுதாபம் காட்டினால் அடியோடு வெறுப்பார். ஒரு காட்சியில் கௌதமி நொந்துபோய் “ஆமாம்... உங்க மூக்குல ரத்தம் வந்துட்டே இருக்கட்டும். நான் பாட்டுக்கு ஏதாவது ஜோக் அடிச்சிட்டு இருக்கேன். ஓகேவா?” என்று வெடிப்பது சுவாரஸ்யமான காட்சி. கௌதமியின் நடிப்பு சிறப்பாகப் பளிச்சிடும் காட்சியும் கூட.
தான் நடிக்கும் படங்களில் கமலே அதிகமாக ஆக்கிரமித்துக் கொள்வார் என்கிற கிண்டலில் பெரும்பாலான சமயங்களில் உண்மையில்லை. ஒரு காட்சியில் குறிப்பிட்ட நடிகருக்குத்தான் அதிக ஸ்பேஸ் அவசியம் என்றால் கமல் அதற்கு ஆதரவு தருவதைப் பல படங்களில் பார்க்கலாம். நடிகரின் பங்களிப்பு அதிகம் தெரிவதை விடவும் குறிப்பிட்ட காட்சி சிறப்பாக உருவாவது முக்கியமானது என்பது ஒரு திரைக்கதையாசிரியராக அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
அந்த வகையில் கமலுக்கு அடுத்தபடியாக ‘நம்மவர்’ திரைப்படத்தில் இருவரின் நடிப்பு சிறப்பாக வெளிப்பட்டது. ஒருவர் நாகேஷ். கமலுக்கு நாகேஷ் மீதுள்ள பிரியமும் மரியாதையும் நமக்குத் தெரியும். ஒவ்வொரு நேர்காணலிலும் நாகேஷின் பெயரை கமல் உச்சரிக்கத் தவற மாட்டார். ‘ராவ்’ என்கிற முக்கியமான பாத்திரத்தை தன்னால் தாங்க முடியுமா என்று நாகேஷ் தயங்கிய போது கமல் வற்புறுத்தி நடிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.
'மாமன்னன்' திரைப்படத்தில் வடிவேலுவின் நடிப்பு சில காட்சிகளில் சிறப்பாக வெளிப்பட்டதை இப்போது சிலாகிக்கிறோம். ஆனால் இதற்கெல்லாம் முன்னோடி என்றால் அது நாகேஷ்தான். ஒரு நகைச்சுவை நடிகனால் மிகச் சிறந்த குணச்சித்திர நடிப்பைத் தர முடியும் என்பதற்கான முன்னுதாரணம் நாகேஷ். பாலசந்தரின் சில திரைப்படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். இந்த வகையில் நாகேஷின் குணச்சித்திர நடிப்பு உச்சமாக வெளிப்பட்ட திரைப்படம் ‘நம்மவர்’. சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அவருக்குக் கிடைத்ததது பொருத்தமே.
தன்னுடைய மகள் இறந்த செய்தியைக் கேட்டு கமலின் கையை உதறிவிட்டு நாகேஷ் வேகமாக ஓடிச் செல்லும் காட்சி முதல், சுடுகாட்டில் தனது மகளுடன் கற்பனையில் நடனமாடும் காட்சி வரை நாகேஷ் வெளிப்படுத்தியிருக்கும் அந்த அட்டகாசமான நடிப்பு அசுரத்தனமானது. மகளின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் கண்கள் இருண்டு இடிந்து அமரும் ஒரு தகப்பனின் சித்திரத்தை நாகேஷ் அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார். இடையிடையே அவருடைய காமெடி டைமிங்கும் அற்புதமாக வெளிப்பட்டிருக்கும். கல்லூரியில் நடக்கும் கலாட்டாவில் டியூப்லைட் உடைந்து கீழே கிடக்கும். “ராவ்... பாத்து போங்க” என்பார் கமல். “பார்த்து போறதுக்குத்தானே லைட் போட்டிருக்கான்” என்பார் நாகேஷ். என்னவொரு நையாண்டி பாருங்கள்?! தனது மகளுடன் இணைந்து நாகேஷ் ஆடும் ஒரு நடனக்காட்சி அற்புதமானது.
நாகேஷிற்கு அடுத்தபடியாக சிறந்த நடிப்பு வெளிப்பட்டிருப்பது கரணிடமிருந்து. மாஸ்டர் ரகு என்கிற பெயரில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். வாலிபரான பிறகு அவருக்கு மிகுந்த கவனத்தைப் பெற்றுத் தந்த படம் ‘நம்மவர்’. ரமேஷ் என்கிற முரட்டுத்தனமான மாணவன் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் கரண். தன்னைத் திருத்த முயலும் கமலை கொடூரமாகப் பழிவாங்க முயல்வார். இவருக்கும் கமலுக்கும் இடையே நடக்கும் சதுரங்க ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும். பாத்ரூமில் இருவருக்கும் நடக்கும் உரையாடலும் இறுதியில் தன் தலையைத் தானே உடைத்துக் கொண்டு ‘செக் அண்ட் மேட்ன்னு சொன்னீங்களே சார்’ என்று ரத்தம் வழிய கரண் சொல்வது சிறந்த காட்சி.
நாகேஷின் மகளாக டான்ஸ் மாஸ்டர் பிருந்தா நடித்திருந்தார். அவர் நடித்த ஒரே திரைப்படம் இதுதான். டான்ஸராக இருந்த ராம்ஜி, நடிகராக அறிமுகமான படமும் இதுவே. சில காட்சிகளில் மட்டுமே வந்து போனாலும் கமலின் அக்காவாக ஸ்ரீ வித்யாவின் நடிப்பு இயல்பாகவும் ஆத்மார்த்தமாகவும் இருந்தது. கோவை சரளா ஓரமாக வந்து போனார். செந்தில் சில காட்சிகளில் கவனிக்க வைத்தார். காலேஜ் கேன்டீன் நடத்துபவராக வந்த டெல்லி கணேஷின் நடிப்பும் அருமை. இவரது மகன் முருகனாக நடித்தவர் விஷ்ணு தேவா. நடிகை நளினியின் சகோதரர். இப்போது பிரபல டான்ஸ் மாஸ்டராக இருக்கிறார். இந்தப் படத்தில் திக்கித் திக்கி பேசுபவராகச் சிறப்பாக நடித்து பரிதாபத்தைப் பெற்றார். தமிழ் வாத்தியாராக மதன் பாப் நடித்திருந்தார். இந்தப் படத்திலும் தமிழ் ஆசிரியரைக் கோமாளி போல் காட்டியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
‘நம்மவர்’ திரைப்படத்திற்கு இசையமைத்தவர் மகேஷ். ரஹ்மானைப் போலவே விளம்பரப் பாடல்களுக்கு இசையமைத்து பிறகு சினிமாவிற்கு வந்தவர். ரஹ்மானைப் போலவே அதிக உயரத்திற்குச் சென்றிருக்க வேண்டிய திறமையாளர். கேன்சர் நோய் காரணமாக 2006-ல் இறந்தார். மகேஷிற்கு கேன்சர் இருந்த காரணத்தால் செல்வத்தின் பாத்திரத்திலும் அதைப் பிரதிபலிக்க வைத்தார் கமல். கேன்சர் என்றாலே அதுவரை இருமி அழுது சோகம் அடைந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவில், அனுதாபமோ சோகமோ வேண்டாம் என்பது போல் வசனம் பேசி நடித்தார் கமல். "முற்றுப்புள்ளிதான் ஒரு வாக்கியத்திற்குக் கூடுதல் அழகு சேர்க்கும்" என்கிற வசனம் கமல் தரும் வியாக்கியானம்.
‘சொர்க்கம் என்பது நமக்கு’, ‘பூங்குயில் பாடினால்’, ‘உடையோடு பிறக்கவில்லை’ ஆகிய பாடல்கள் கேட்பதற்கு வித்தியாசமான ஒலியமைப்புடன் இனிமையாக இருக்கும். வாத்திய இசையே இல்லாமல், வாயால் எழுப்பக்கூடிய சத்தங்களை வைத்து உருவாக்கப்பட்ட ‘எதிலேயும் வல்லவன்டா’ பாடல் வித்தியாசமானது. பின்னணி இசையிலும், குறிப்பாகச் சண்டைக்காட்சிகளின் பின்னணியில் மகேஷின் திறமை அபாரமாகப் பளிச்சிட்டிருக்கும். மது அம்பாட்டின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்திருந்தது. வசனங்களில் தென்பட்ட புத்திசாலித்தனத்திற்கும் கூர்மையான நகைச்சுவைக்கும் கண்மணி சுப்பு காரணமாக இருந்தார்.
‘செப்பு’ மலையாளத் திரைப்படத்தில் நடித்த மோகன்லால் இறுதியில் கொல்லப்படுவார். ஆனால் தமிழில் இதைத் தவிர்த்து விட்டு நோய் குணமாகி கமல் திரும்புவார் என்பது போல் இறுதிக்காட்சி பாசிட்டிவ்வாக அமைக்கப்பட்டிருக்கும். ஹீரோ இறந்துவிட்டால் படம் ஓடாது என்கிற சென்டிமென்ட் ஒரு காரணமாக இருக்கலாம். வணிக ரீதியாகப் படம் வெற்றி பெற்றாலும் அதிகமான கவனத்தைப் பெறவில்லை.
Post a Comment