ஒரு சாலை விபத்தில் அழகிய இளம்பெண் ப்ரயாகா அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடிக்க, அந்தப் பக்கமாக வரும் நாகா உள்ளிட்ட மூவர் ஒரு ஆட்டோக்காரர் உதவியுடன் அவளை மருத்துவனையில் சேர்க்கின்றனர். அவர்களில் நாகாவின் கையை இறுகப் பற்றிக் கொள்கிறாள் ப்ரயாகா.
DOWNLOAD
மருத்துவமனைக்குப் போன சில நிமிடங்களில் அவன் கையை இன்னும் இறுகப் பற்றிய நிலையில், 'ப்பா..' என்ற ஒற்றைக் குரலோடு அவள் உயிர் அடங்குகிறது.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
ப்ரயாகாவின் தந்தை ராதாரவியிடம் உடலை ஒப்படைத்துவிட்டு மனசு முழுக்க பாரமாய், அவளின் ஒற்றைச் செருப்பை நினைவாக எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறான் நாகா. கவலையைப் போக்க மது அருந்த முடிவு செய்து பாட்டிலை எடுக்கிறான். முதலில் ஓபனர் காணாமல் போகிறது.. அடுத்து பாட்டில்கள் தாமாக உடைந்துவிடுகின்றன. தன் வீட்டில் அமானுஷ்யம் இருப்பதை உணர்கிறான் நாகா. அது இறந்துபோன ப்ரயாகாவின் ஆவிதான் என்பதை அடுத்தடுத்த காட்சிகளில் தெரிந்து கொள்கிறான்.
அடுத்து அந்த பிசாசை விரட்டும் முயற்சிகளில் இறங்குகிறான். விரட்டினானா? ப்ரயாகா பிசாசாகக் காரணமானவனைக் கண்டுபிடித்தானா? என்பதெல்லாம் திரையில் பார்க்க வேண்டிய சமாச்சாரங்கள். படம் நூறு சதவீதம் பிசாசு சம்பந்தப்பட்டது என்பதால், பிசாசின் உருவம், நடமாட்டம் போன்றவற்றில் லாஜிக் பார்க்க முடியாது. பிசாசைப் படைப்பதில் அவரவருக்கு ஒரு பாணி!
ஆனால் படம் முழுக்க மிஷ்கினுக்கே சொந்தமான க்ளீஷேக்கள் அனைத்தும் காணக் கிடைக்கின்றன. முன்பக்க முடி பாதி முகம் மறைத்தபடி, ஒருவித சைக்கோத்தன்மை யுடன் ஹீரோ, சற்றும் இயல்பில்லாத பாத்திரங்கள், சண்டைக்காட்சி, காமிரா கோணங்களை, பழகிய மனநிலையுடன் கடந்து போக வேண்டியிருக்கிறது. காரைவிட்டு இறங்கி மாடிப்படிகளேறி, கதவை சாவி போட்டுத் திறந்து, விளக்கின் பொத்தான்களை அழுத்தி, உடை களைந்து, குளித்து, இருக்கைக்கு வரும் வரை அந்தக் காட்சியை அசாதாரண நீளத்துடன் காட்டுவது என்ன வகை காட்சியமைப்போ... இதுபோல பல காட்சிகளில் நீ...ண்ட விவரணைகள் ஆயாசம் தருகின்றன.
ஆனால்... மிஷ்கின் எடுத்திருக்கும் சில காட்சிகளில் மனசு நெகிழ்ந்து கண்ணீராய் வழிகிறது. அந்த அன்பும், பரிவும், மனிதாபிமானமும்தான் இந்த வாழ்க்கையை நகர்த்தும் பெரும் சக்தி. ஆரம்பக் காட்சியில் மருத்துவமனை நடையில் தூரத்தில் தெரியும் ராதாரவி, 'அய்யோ மகளே.. பவானி, என் சாமி..' என கதற, உள்ளுக்குள் நாம் உடைந்து போகிறோம். பெரிய நுட்பமெல்லாம் அந்தக் காட்சிக்குத் தேவைப்படவில்லை. அடிநாதமாய் ஓடும் அன்பின் வெளிப்பாட்டைத் தவிர.. அதேபோல, தன் மகள் பேயாய் உலவும் வீட்டுக்கு வரும் ராதாரவி, மகளின் பிசாசு ரூபம் பார்த்து கதறியழ, மேலிருந்து மகளின் கரங்கள் இறங்கி வந்து அவர் தலையையும் முகத்தையும் தடவிக் கொடுக்க... பெருங்குரலெடுத்து 'என் மகளே.. தெய்வமே.. வீட்டுக்கு வந்துடும்மா.. அடுத்தவங்களுக்கு தொந்தரவு தரலாமா?' என்றெல்லாம் அவர் கதற.. அங்கே கலங்காத கண்கள் மனிதருடையவையாக இருக்காது.
அத்தனை நெகிழ்ச்சி. ராதாரவி நடிப்பில் புதிய பரிமாணம் இது. அலட்டிக் கொள்ளாமல் கலங்கடித்திருக்கிறார். ஹீரோவாக வரும் நாகாவின் முகத்தை கடைசி வரை சரியாகப் பார்க்க முடியாதபடி முடி மறைக்கிறது. அதில் ஏதாவது குறியீடு வைத்திருக்கிறாரா மிஷ்கின் என்பது தெரியவில்லை. ப்ரயாகாவுக்கு மிக அழகான முகம். அந்த கண்களும் உதடுகளும் ஏதோ சொல்ல வருவதைப் போன்ற தோற்றம். கொஞ்சமே வந்தாலும் நிறைக்கிறார் மனசை. மற்றெல்லாரும் சிறுசிறு வேடங்களில் வருகிறார்கள்.
நிறைவாய் செய்திருக்கிறார்கள். வேறு பிரதான பாத்திரங்களே படத்தில் இல்லை. ஆனாலும் கடைசி காட்சி வரை ஒரு எதிர்ப்பார்ப்புடன் படத்தை நகர்த்திச் செல்வதில் வெற்றி கண்டுள்ளார் இயக்குநர். அந்த 20 நிமிட க்ளாமாக்ஸ் காட்சி எல்லோருக்கும் புரிய வேண்டும். ஆட்டோ ட்ரைவருக்கு நிறக்குருடு என்பதை இன்னும் சற்று நேரடியாகச் சொல்லியிருக்கலாம். பேயை விரட்ட வரும் ஆவி அமலாவின் டுபாக்கூர்தனங்களைக் காட்சிப்படுத்தியிருப்பதில் மிஷ்கின் வெளிப்படுத்தியிருக்கும் 'சர்காஸம்' புன்னகைக்க வைக்கிறது. எடுத்தது பேய்ப் படம் என்றாலும், தன்னால் முடிந்த ஒரு பகுத்தறிவுப் பிரச்சாரத்தை வைத்திருக்கிறார்.
ரவி ராயின் கேமராவும், அரோல் கொரோலியின் இசையும் படத்தின் பெரும் பலம். தேவையான காட்சிகளில் மட்டும் இசை. மற்ற நேரங்களில் மவுனம். மிக அழகாகச் செய்திருக்கிறார். படத்தில் இடம்பெறும் அந்த ஒற்றைப் பாடலில், வரிகளை விட வயலின் இசை மனதைப் பிசைகிறது. வெல்டன்! கமர்ஷியலாக வெற்றியைப் பார்த்தாக வேண்டும்... வேறு வழியில்லை, இருக்கிற பேய் சீசனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என முடிவெடுத்து மிஷ்கின் தந்துள்ள படம் இந்த பிசாசு. பார்ப்பவரை நடுங்க வைக்கும், மிரள வைக்கும் பிசாசல்ல இது... பேரன்பும் பெரும் கருணையும் கொண்ட பிசாசு!
Post a Comment