கோவையில் வசிக்கும் பார்வையற்ற செல்வந்தரான கவுதம் (உதயநிதி), வானொலி அறிவிப்பாளர் தாஹினியை (அதிதி ராவ்) ஒருதலையாகக் காதலிக்கிறார். தாஹினியின் கவனத்தைப் பெற அவரை சுற்றிச் சுற்றி வருகிறார். அதேநேரம், நகரில் அடுத்தடுத்து இளம்பெண்களைக் கடத்திக் கொடூரமான முறையில் கொல்லும் சைக்கோ கொலைகாரன் (ராஜ்குமார்) பற்றி எந்தத் துப்பும் கிடைக்காமல் அல்லாடுகிறது காவல் துறை. அப்படிப்பட்ட கொலைகாரனிடம் சிக்கிக்கொள்கிறார் தாஹினி.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
காவல் துறையால் கண்டுபிடிக்க முடியாத அவனைக் கண்டுபிடித்து தனது காதலியைக் காப்பாற்றத் துடிக்கிறார் கவுதம். அதற்காக யாருடைய உதவியை நாடினார், அந்த சைக்கோ கொலைகாரன் யார், அவனது மனப்பிறழ்வுக்கு என்ன காரணம், பார்வையற்ற நாயகனால், நாயகியை காப்பாற்ற முடிந்ததா, இல்லையா என்பது கதை.
DOWNLOAD
சுற்றி வளைக்காமல் நேரடியாக கதை சொல்லிப் பழக்கப்பட்டவர் மிஷ்கின். இந்தப் படத்திலும் அதைதிறம்படவும், விறுவிறுப்பு குறையாமலும் செய்திருக்கிறார். அதேபோல,தனக்கென்று அவர் உருவாக்கிக்கொண்டுள்ள பிரத்யேக திரைமொழியில், திடுக்கிடல்களை உள் நுழைத்து அவர் உருவாக்கும் எதிர்பாராத தருணங்கள், அவருக்கென்று தனித்த ரசிகர்களை ஈட்டித் தந்தவை. அத்தகைய அவரது திரைமொழியும், கதாபாத்திர வடிவமைப்பும் அவருக்கான பயணத்தில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன.
ஆனால், எதிர்மறைக் கதாபாத்திரத்தை இயக்கும் பின்னணிக் காரணம் அழுத்தமாக இல்லாமல் போனதில், மொத்த படைப்பு முயற்சியும் நங்கென்று அடிவாங்குகிறது. ‘இதற்குத்தானா இவ்வளவு வன்முறையும்’ என்ற அயர்ச்சி கலந்த ஏமாற் றத்தை ரசிகர்களுக்கு தந்துவிடுகிறது.
அதேபோல, பத்துக்கும் அதிகமான கொலைகள் நடந்த பிறகும் துப்பு கிடைக்காமல் போலீஸார் வருவதும் போவதுமாக இருப்பது மிஷ்கின் பாணியில் இருந்து விலகி நிற்கும் இழை. ஒரு கட்டத்தில் பார்வையற்ற நாயகனின் வழியை பின்பற்றிச் செல்லும் காவல் துறையின் போதாமை குறித்த சித்தரிப்பு, அவல நகைச்சுவைக்கு வெகு அருகாமையில் வந்துவிடுகிறது.
அடுத்தடுத்து நடக்கும் கொலை கள், காவல் துறையின் தடுமாற் றம், கவுதம் – தாஹினியின் காதல்,தாஹினி காணாமல்போவது, பார்வையற்ற நாயகன், பார்வை இருந்தும் இருட்டில் முடங்கிப்போன ஒருவரது உதவியை நாடுவது, காவல் துறையை நம்பாமல் தனது நுட்பமானதிறன்களைப் பயன்படுத்தி நாயகன்துப்பறியும் விதம் என ஜிவ்வென்று பறக்கிறது முதல்பாதி. இரண்டாம் பாதியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.
கொலைகாரன் யார் என்பதை படத் தொடக்கத்திலேயே காட்டி, பார்வையற்ற நாயகனுடன் அவன் ஆடும்கண்ணாமூச்சி ஆட்டத்தை ரசனையாகவே படமாக்கியுள்ளார் மிஷ்கின். மாற்றுத் திறனாளிகளை வைத்து புலனாய்வு செய்யும் காட்சிகள் ஒருதொடர் கொலை படத்தில் நம்பிக்கையூட்டும் வகையில் இருப்பதைப் பாராட்டலாம்.
கண்காணிப்பு கேமராக்கள் நிறைந்திருக்கும் யுகத்தில் அதைப் பற்றிய பேச்சே இல்லாமல் விசாரணைக் காட்சிகள் நகர்கின்றன. குறைந்தபட்சம், 10 ஆண்டுகளுக்கு முன்பு கதை நடப்பது போல காட்டி பார்வையாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டியிருக்கலாம். அதிநவீன கார்,‘வேலட் பார்க்கிங் கொலை’ என்றெல்லாம் காட்டும்போது அங்கு சிசிடிவி இல்லை என்று சித்தரிப்பதை ஏற்கமுடியவில்லை.
படத்தின் நாயகன் உதயநிதி பார்வையற்ற மாற்றுத் திறனாளியாக வருகிறார். அதற்கான உடல்மொழியை நேர்த்தியாக வெளிப்படுத்துகிறார். ஆனால், ‘உன்னை நெனச்சு நெனச்சு’ பாடலில் அவரது நடிப்பு சுமார்தான். நாயகியாக வரும் அதிதிராவ், மாற்றுத் திறனாளியாக வரும்நித்யா மேனன் இருவரும் கதாபாத்திரங்களுக்கான நடிப்பைத் தருவதில் வெற்றி பெறுகின்றனர். கொலைகாரனாக வரும் ராஜ்குமாரின் நடிப்பும் நம்பகத்துடன் இருக்கிறது.
இளையராஜாவின் பின்னணி இசை ஒரு கதைசொல்லியைப் போலமிஷ்கினின் காட்சிமொழிக்கு அங்குலம் அங்குலமாக உயிர் கொடுக்கிறது. பறவைக் கோணக் காட்சிகள், இரவுக்காட்சிகள், கொலைகாரன் வசிப்பிடம், அவனது கொலைக் களம் ஆகியவற்றை தன்விர் மிர்ரின் படப்பதிவு, மர்மமும் ரத்தமும் தோய்ந்த ஒளியுடன் காட்சிப்படுத்துகிறது. அருண்குமாரின் படத்தொகுப்பில் குறையில்லை.
காவல் துறையால் மோப்பம் பிடிக்க முடியாத கொலைகாரனை, மனதில் காதலைச் சுமக்கும் பார்வையற்ற நாயகன் மோப்பம் பிடித்து நெருங்கும் சவாலான கதைக்களம்.. அதற்கேற்ற விறுவிறுப்பான திரைக்கதை.. ஆனாலும், கொலையாளியின் பின்னணிக் காரணத்தில் போதிய சத்து இல்லாததால், உச்சத்தை தொட வேண்டிய இந்த சைக்கோ, அச்சச்சோ என்று சொல்ல வைத்து விடுகிறான்!
Post a Comment